தேர்தல் தோல்வியை அடுத்து அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி.தினகரன் கூறுகையில் கட்சியில் இருந்து யார் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக களம் இறங்கியவர் இசக்கி சுப்பையா. இந்நிலையில், அவர் அமமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருடன் தாய் கழகத்தில் இணைய உள்ளாதாக அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என என்னை டிடிவி. தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல, நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னால்தான் இசக்கி சுப்பையா அடையாளம் காட்டப்பட்டார் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். ஆனால் தினகரனே தொண்டர்களால் அடையாளம் காணப்பட்டவர்தான் எனத் தெரிவித்தார்.

இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏற்கனவே சொன்னதை தான் மீண்டும் சொல்கிறேன். கட்சியில் இருந்து யார் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களை தடுத்துநிறுத்தி என்ன ஆகப்போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். 

இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்களில் சொல்லலாம். யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என டிடிவி.தினகரன் கெத்தாக கூறியுள்ளார்.