பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு, எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று டிடிவி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

எடப்பாடி அணி, தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியை தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள், கர்நாடக மாநிலத்தின் குடகில் உள்ள அதிநவீன சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குடகில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் தங்க. தமிழ்செல்வன், கதிர்காமு, மாரியப்பன் கென்னடி ஆகியோர் நாளை பெங்களூரு சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு நாளை காலை 10 மணிக்குமேல் நடைபெறும் என்றும் தெரிகிறது. டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ளதால், சசிகலாவை சந்திக்க மாட்டார் என்றும், எம்எல்ஏக்கள் மூவரும் சசிகலாவை சந்திப்பது உறுதி என்றும் தகவல் தெரிவிக்கின்றன.