இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ, அங்குதான் நானும் இருப்பேன் என்று டிடிவி தினகரன் அணியில் இருந்த விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ., கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அணியில் கடந்த 2017-ம் ஆண்டில் சேர்ந்தார் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன். தினகரன் அமமுக கட்சியைப் பதிவு செய்தபிறகு, உறுப்பினர்கள் அல்லாதவர்களாக அவரோடு இணைந்து பணியாற்றிவந்தனர். கலைச்செல்வன் உள்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சி முயற்சி செய்தது. ஆனால், சபநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் காரணமாக, உச்ச நீதிமன்றம் சென்று கலைச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.


இந்நிலையில் தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததால், அக்கட்சியில் உள்ள பலரும் அதிமுகவுக்குத் திரும்பிவருகிறார்கள். தினகரனை தீவிரமாக ஆதரித்துவந்து எம்.எல்.ஏ. கலைச்செல்வனும் தற்போது மனம் மாறிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தினகரனுடன் இணைந்திருந்த காலகட்டம் முடிந்து விட்டது. இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்குதான் நானும் இருப்பேன். அமமுக என்ற கட்சியை தினகரன் பதிவு செய்ததிலிருந்தே எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 
தற்போது முதல்வரை சந்திக்கும் அவசியம் ஏற்படவில்லை. என்னை ஜெயலலிதாதான் என்னை சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராக அறிவித்தார். முதல்வராக ஜெயலலிதா வர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் எனக்கு வாக்களித்தர்கள். ஜெயலலிதாதான் என்னை எம்.எல்.ஏ.வாக ஆக்கினார்.

 
சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியவர்கள்தான் அவரை முதல்வர் என்றார்கள். எம்எல்ஏக்களாகிய நாங்களும் அதையே கூறினோம். சசிகலாவை நாங்கள் ஆதரிக்கிறோம். சட்டப்பேரவையில் எப்போதும் அதிமுக கொறடா உத்தரவுப்படியே நடந்து வந்துள்ளோம். ஆட்சியை எப்போதும் எதிர்த்ததில்லை. ஆட்சிக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை.” என்று கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தினகரன் தரப்பிடமிருந்து விலக கலைச்செல்வன் முடிவு செய்திருப்பது உறுதியாகிவிட்டது.