புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, டி.டி.வி.தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்களில் எட்டு பேர், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, வீட்டிற்கு செல்ல வேண்டும் என, அடம் பிடித்தும், அவர்களை வெளியே அனுப்ப, தினகரன் ஆட்கள் மறுத்து விட்டனர்.

புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள , சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள, நட்சத்திர சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு, 19 எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஒரு நாள் பொழுதுபோக்கி விட்டு வரலாம் எனச் சொல்லி, டி.டி.வி.தினகரன் ஆட்கள் அவர்களை அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு வாரகணக்கில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை அறிந்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில், எட்டு பேர், தினகரன் நடவடிக்கை பிடிக்காததால், மனம் மாறியுள்ளனர் என்றும்  தங்களை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்' என, கேட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது . ஆனால் அவர்களை அனுப்ப தினகரன் ஆட்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது.

அதனால், கோபமடைந்த, பெண், எம்.எல்.ஏ., தன் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வேண்டும் என, தகராறு செய்துள்ளார். குடும்பத்தினரை அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறி, அவரை சமாதானப் படுத்தி உள்ளனர்.

பெண், எம்.எல்.ஏ., உட்பட, எட்டு பேர், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, வீட்டுக்கு செல்ல வேண்டும்' என, வற்புறுத்தியும், அதற்கு, தினகரன் ஆட்கள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில்புதுச்சேரி சென்று, அங்கு, எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டிருந்த தினகரன் இது குறித்த  தகவல் அறிந்ததும் புதுச்சேரி செல்லும் முடிவை, கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.