எம்.ஜி.ஆர். காலத்திலேயே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கட்சியில் இருந்து வந்துள்ளார்கள் என்றும், இவர்களின் முழுமையான செயல்பாட்டின் மூலம் மக்கள் விரும்பத்தக்க வகையில் ஆட்சியையும் கட்சியையும் நடத்துவார்கள் என நம்புவதாக சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.

சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக டிடிவி தினகரன் எங்கிருந்தார். டிடிவி தினகரனின் முரண்பட்ட தகவல்கள், அவரது செயல்பாடுகள் அளவுக்கு மீறி போய்விட்டது. கட்சிக்கு துரோகம் செய்வது யார்? என்பது அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்.

முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையில், சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதத்தில், என்னுடைய உறவினர்கள், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்
என்று சசிகலாவின் மன்னிப்பு கடிதத்தில் கூறியதை நினைவுபடுத்தினார்.

மேலும், ஜெயலலிதா மறைந்த பிறகு நான் எந்த அணியிலும் இல்லை. கடந்த டிசம்பர் 15-க்கு பிறகு கட்சிப் பணியில் ஈடுபடுவதில்லை. கல்வி பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். பிளவுபட்ட அணிகளில் இருக்க மாட்டேன். ஒன்றுபட்ட அதிமுகவில் மட்டுமே நான் இருப்பேன். சசிகலா வழங்கிய பதவியை நான் ஏற்கவில்லை.

புரட்சித் தலைவர் காலத்திலேயே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கட்சியில் இருந்து வந்துள்ளார்கள். இவர்களின் முழுமையான செயல்பாட்டின் மூலம், மக்கள் விரும்பத்தக்க வகையில் ஆட்சியையும், கட்சியையும் நடத்துவார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.