வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்ட அமமுக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோயில் ஆடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்க தொகுதி எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன் வந்தார். அப்போது அத்தொகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் டிடிவி தினகரனுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டினர். இதனால், அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பிறகு தினகரன் சுவாமி தரிசனம் செய்து, க்களுக்கு அன்னதானம் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி.தினகரன் பேசினார் 
“நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிடவில்லை.  அப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு அளிக்க வேண்டும். கஜா புயலின்போது நிவாரணம் வழங்காமல் இந்த அரசு கோட்டைவிட்டது. அதுபோல நீலகிரியிலும் நடக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வண்ணம் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கண்டிப்பாகப் போட்டியிடும்.” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பொதுச்சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை என்று கூறி வேலூர் தேர்தலில் போட்டியிடாமல் போனதற்கு டிடிவி தினகரன் காரணம் கூறியிருந்தார். பொதுச்சின்னம் கிடைக்காவிட்டால் விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடாது என்று கூறப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகக் கட்சியைப் பதிவு செய்து சின்னத்தை பெறும் முயற்சியில் அமமுக தற்போது தீவிரம் காட்டிவருகிறது.