ttv dinakaran will contest rk nagar by election he announced
ஆர்.கே.நகரில் மீண்டும் களத்தில் இறக்குகிறார் தினகரன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தாமே போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் டிடிவி தினகரன். இதனை அவரது ஆதரவு அவைத்தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமது அணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று அறிவிப்பதாக இன்று கூறியிருந்தார் தினகரன். அவரது ஆதரவாளர்கள் யாரேனும் போட்டியிடக் கூடும் என்று தகவல் பரவியது. இந்நிலையில், ஆர்.கே.நகரில் தாமே போட்டியிடப் போவதாக ஆதரவாளர்கள் மூலம் அறிவித்தார் டிடிவி தினகரன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தினகரனுக்கு அவரது குடும்பத்தில் அறிவுரை கூறப்பட்டிருந்தது. முன்னதாக, ம.நடராசன், இது குறித்து தினகரனுக்கு அளித்த அறிவுரையில், ஆர்.கே.நகரில் நின்றால் சிறைக்குப் போவது உறுதி. எனவே, இப்போதைக்கு அந்த வீண் வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம், ஒதுங்கிக் கொள்வது நல்லது என்று கூறினாராம். ஆனால் அதை தினகரன் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

வரும் டிச.21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அங்கே நிறுத்தி வருகின்றன. திமுக., சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். அவர் ஏற்கெனவெ அறிவிக்கப் பட்டிருந்த வேட்பாளர்தான்.
இதனிடையே அதிமுக.,வில் வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அதிமுக.,வினரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர். அதிமுக., சார்பில் யார் போட்டியிடுவர் என்பது டிச.1ம் தேதி தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இரட்டை இலையை மீட்பதற்காக இரட்டையை இலையை எதிர்த்து நிற்போம் என்று கூறி வருகிறார் தினகரன். எனவே தடைகள், தடங்கல்கள், அறிவுரைகள் அனைத்தையும் மீறி, ஆர்கே.நகரில் கட்டாயம் போட்டியிடுவோம் என்று கூறினார் தினகரன்.

அவரது முடிவை மன்னார்குடி குடும்ப உறவுகள் விரும்பவில்லையாம். ஆனால், தினகரனோ, தனக்கு இளைஞர் படை பெரிதாக இருக்கிறது என்றும், ஏற்கெனவே வாக்காளர்களிடம் ஏராளமாகப் பணம் கொடுத்திருக்கிறோம். மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை நிரூபித்துக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இதில் நாம் பெறும் வாக்குகள், ஆளும் கட்சிக்கு ஒரு தலைவலியை ஏற்படுத்தப் போகிறது. எனக்குப் பின்னால் அதிமுக.,வினர் தொண்டர்கள் பெரும் அளவில் அணி திரள்வார்கள். அதற்கு இது ஒரு வாய்ப்பு என்று கூறினாராம்.
இந்நிலையில் தமது கருத்தை உறுதிப் படுத்தும் வகையில், ஆர்.கே.நகரில் தாமே களம் இறங்க முடிவு செய்து அறிவித்துள்ளார் தினகரன். இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
