ttv dinakaran very angry on edappaadi palanisamy and thambidurai

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் மூன்று அணிகளும் பாஜக வேட்பாளரை ஆதரித்ததில் டெல்லி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. ஆனால், தமது ஆதரவாளர்களை, பாஜகவுக்கு ஆதரவளிக்கும் நிர்பந்தத்தை உருவாக்கிய மக்களவை சபாநாயகர் தம்பிதுரை மீது, கடும் கோபத்தில் இருக்கிறார் தினகரன்.

எடப்பாடிக்கு ஆலோசனை சொல்லி, தனி ஆவர்த்தனம் செய்ய காரணமாக இருப்பது தம்பிதுரையே என்று தினகரன் நினைப்பதால், அவர் மீதான கோபம் மேலும் அதிகரித்துள்ளது. தம்முடைய ஆதரவால் முதல்வரான எடப்பாடி, திகார் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தம்மை வந்து சந்திப்பார் என்று நினைத்திருந்தார் தினகரன். ஆனால், எடப்பாடி ஒருமுறை கூட தினகரனை வந்து சந்திக்கவில்லை.

அதேபோல், குடியரசு தலைவர் தேர்தலில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, எடப்பாடி தன்னுடன் கலந்து ஆலோசிப்பார் என்றும் தினகரன் நினைத்திருந்தார். இரண்டுமே நடக்காததால், தமக்கென எம்.எல்.ஏ க்கள் அணி ஒன்றை உருவாக்கி, தமக்கு எதிராக இருக்கும் பாஜகவை, குடியரசு தேர்தலின்போது தமக்கு ஆதரவாக திருப்பலாம் என்றும் தினகரன் கணக்கு போட்டிருந்தார்.

ஆனால், அப்படி எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. குடியரசு தலைவர் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று எடப்பாடி தன்னிச்சையாகவே அறிவித்து விட்டார். அதனால், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ க்களின் வாக்குகளை பெறுவதற்காக, தம்மை சமாதானப்படுத்த எடப்பாடி வருவார் என்று எதிர்பார்த்தார் தினகரன்.

ஆனால், தம்பிதுரையை பெங்களூரு அனுப்பி வைத்த எடப்பாடி, சசிகலாவை சந்திக்க வைத்து, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அவரது ஒப்புதலை பெற்று விட்டார். மேலும், டில்லி சென்று பிரதமர் மோடி மற்றும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை நேரில் சந்தித்து சசிகலா ஆதரவை அவர்களிடம் தெரிவித்து விட்டார்.

இதனால், வேறு வழியின்றி தமது ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி க்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் தினகரன். இதன் காரணமாக, தமது ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி க்கள் மத்தியில் தமக்கு மரியாதை குறைவை ஏற்படுத்தி விட்டார் என்று எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் தினகரன்.

இவை அனைத்திற்கும் சூத்திரதாரியாக இருப்பவர் தம்பிதுரையே என்று அவர் நினைப்பதால், எடப்பாடியை விட தம்பிதுரையின் மீதே அவருக்கு அதிக கோபம் உள்ளது. எடப்பாடி முதல்வரானதை தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக ஆட்சி மற்றும் கட்சியில் முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்த கொங்கு தலைவர்கள், இன்று அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை தினகரானால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால், எடப்பாடி மற்றும் தம்பிதுரைக்கு எப்படி செக் வைப்பது? என்பது குறித்து, தினகரன் தமது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.