ttv dinakaran twitter page ...paid homage to anitha

நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்று கொஞ்சம் கூட எதிர்பாக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்த அனிதா கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவரது தந்தை சண்முகம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக கஷ்டப்பட்டு படித்து வந்தார் அனிதா. ஆனால் நீட் என்ற அரக்கன் அனிதாவின் வாழ்வில் விளையாடிவிட்டான்.

கிராமப்புற மாணவியான அனிதா நீட் நுழைவு தேர்வு எழுதியதில் 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். 

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் , டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன். ஆனால் அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லஎன குறிப்பிட்டுள்ளார்.

அனிதாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.