2019 ஆம் ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவை "இதுதான்"..! செம்ம கலாய் கலாய்க்கும் டிடிவி தினகரன்..! 

"நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்...இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019" என அமமுக வின்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சி செய்வதற்கான முதலிடத்தை தமிழ்நாடு தட்டிச் சென்றுள்ளது. இதற்காக மத்திய அரசு 5.62 புள்ளிகள் வழங்கி கௌரவித்துள்ளது. அதன்படி தேசிய நல்லாட்சி தினத்தை ஓட்டி, மத்திய நிர்வாக சீர்திருத்த மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்கும் துறை ஒரு பட்டியலை தயார் செய்தது. அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை வைத்து எந்த மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி 17 அரசுத்துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களைக் கொண்டு பட்டியல் தயார் செய்து, தமிழகத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. உள்கட்டமைப்பு, சுகாதாரம், நிதி நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, பொதுமக்களுக்கு அரணாக இருப்பது, தாய் சேய் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது என பல விஷயங்களில் தமிழகம் முன்னோடியாக இருந்து உள்ளது.

இதன் காரணமாக 5.62 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து உள்ளது தமிழகம். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் வரும் தருணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்து  உள்ளார். 

அதில், "நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்.. இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடமிருந்து விடை பெறுகிறது 2019" என குறிப்பிட்டு உள்ளார்.டிடிவி தினகரனின் இந்த கருத்துக்கு அதிமுக தரப்பிலிருந்து பல்வேறு எதிர் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.