டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் கெடு இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் அடுத்து நடக்கப்போகிறது என தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் 2 அணிகள் இணைவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

சசிகலா மற்றும் ஓபிஎஸ் என ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த அணிகள் இணைவதற்கு, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 60 நாள் ‘கெடு’ விதித்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.ஆனாலும், 2 அணிகள் இணைவது தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படவே இல்லை.

மாறாக, எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் எதிர்... எதிர்... துருவங்களாக நின்றுகொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் தீவிர கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாகவும், நாளை முதல் அதிமுக தலைமை அலுவலகம் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால்  டி.டி.வி. தினகரனை கட்சி அலுவலகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்றும், தடையை மீறி உள்ளே நுழைய முயன்றால் கைது நடவடிக்கையில் இறங்குவது என்றும்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்  டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நாளை கட்சி அலுவலகத்துக்கு வந்தால் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.