டிடிவி தினகரனின் துரோக கும்பலை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார். இதில், சுவாரசியம் என்னவென்றால், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இன்று யாரை கை நீட்டி எச்சரிக்கை விடுத்திருக்கின்றாரோ அந்த தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்தவராவார். 

அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் பிரிந்து சென்றபோது, கோகுல இந்திராவும் அவர்களுடன் சென்ற விடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்து ஆதரவாளராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில்தான் சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழாவில், கோகுல இந்திரா, அதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது பேசிய கோகுல இந்திரா, அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட தகுதியானவர்கள் கழகத்தினர் மட்டுமே. அண்ணாவின் கொள்கைகளையும், தொண்டுகளையும் பின்பற்றி நடத்திக் கொண்டிருப்பதாக கூறினார். மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும், ஊழல் ஊழல் என்று கூறி வருகிறார். எப்படியாவது ஆட்சியை கலைத்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்காரலாம் என்று கனவு காண்கிறார். 

அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது. ஆட்சி மீது குறை சொல்வதை விட்டுவிட்டு, திமுகவில் நடக்கும் குடும்ப சண்டையை சரிகட்டுங்கள் என்றார். டிடிவி தினகரன் ஞானி போன்று பேசுகிறார். அதிமுக அரசு விரைவில் கலையும் என்று பேட்டி கொடுத்து வருகிறார். டிடிவி மீதும் வழக்கு உள்ளது. அதைமறந்து விட்டு ஏதோ உத்தமர் போல அரசிட்ன ஊழல் குறித்து பேசுகிறார். 

 அதிமுக இரும்பு கோட்டை போன்றது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி. ஜெயலலிதாவால் வளர்த்த கட்சி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனின் துரோக கூட்டத்தை அவரது ஆன்மா சும்மா விடாது. எந்த கொம்பனாலும் ஜெயலலிதா (அதிமுக) ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது கோகுல இந்திரா பேசினார்.