கடந்த 2106 சட்டப் பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தேமுதிக, மதிமுக மற்றும் இடது சாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்தார். ஆனால் அந்த அணி தேர்தலில் தோற்றுப் போனது. அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு இந்த மக்கள் நலக் கூட்டணிதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு இணக்கமான நிலையை கடைப்பிடித்து வந்தது. திருமாவளவன் திமுக கூட்டணியில் உள்ளார் என்ற பிம்பமே இருந்து வந்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டி அளித்த, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., கூட்டணியில் இல்லை என்றும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மட்டுமே உள்ளன. நட்பு கட்சிகள் வேறு; கூட்டணி கட்சிகள் வேறு என பேசி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன் நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், திருமாவளவனும் திடீரென சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க டிடிவி தினகரன் செல்லும் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இருவரும் சந்தித்தனர்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.