ஆர்.கே நகர் இடைதேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் 15 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் சூடு பறக்க தொடங்கியுள்ளது.

கடும் எதிர்ப்பு இருக்கும் என கூறப்பட்ட சசிகலா அணியின் டிடிவி தினகரனுக்கு மற்றவர்கள் எதிர்பார்த்ததை போல எதிர்ப்பு ஒன்றும் காணப்படவில்லை.

மாறாக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள்தான் ஆங்காங்கே சிக்கி கொள்கின்றனர்.இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் நேற்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, வேணுகோபால் எம்.பி உள்ளிட்ட ஏராளமான மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரண்பட்ட தகவல்களை கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
டிடிவி தினகரன் பேசி முடித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பின்னர் பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஓபிஎஸ் அணி நமக்கு ஒரு பொருட்டே அல்ல.திமுகவுடன் தான் நமக்கு உண்மையான போட்டி. திமுக வாக்குகளை ஓரளவுக்கு திசை திருப்பி விட்டாலே நாம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவோம் என்றார்.

அப்போதே இடை மறித்து பேசிய வேணுகோபால் எம்பி நமக்கு ஓபிஎஸ்சும் எதிரிதான் அவர்களும் இங்கு பலமாக உள்ளார்கள் என தெரிவித்தார்.

மேலும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும் அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன் வேணுகோபால் மற்றும் செங்கோட்டையன் கருத்துக்கு முற்றிலும் மாறாக ஓபிஎஸ் அணியை விட 5 அல்லது 10 ஓட்டுக்களாவது அதிகம் பெற்று விட வேண்டுமென ஒரு குண்டை போட்டார். 

50000 வாக்குகள் ஒரு லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் திண்டுக்கல் சீனிவாசனோ 5 அல்லது 10 ஓட்டுக்கள் மட்டுமே அதிகம் பெற்றால் போதும் என்று கூறியது தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.