தினகரனுக்கு-திவாகரனுக்கு வார்த்தை போர் உச்சத்தை அடைந்துள்ளது. ஏழரை சனி ஒழிந்துவிட்டது என்ற ஜெய் ஆனந்த் பேச்சுக்கு கத்துக்குட்டிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று  டிடிவி.தினகரன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். அ.ம.மு.கவின் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் தலைமையகத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட அளவிலான தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தேர்தல் பொறுப்பாளர்கள் தவிர வேறு யாருக்கும் உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை.

கூட்டத்திற்கு பிறகு டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு முன்னோட்டம் மட்டுமே. அடுத்து வரும் 2 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதான கட்சி என்பதை நிரூபிப்போம். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் மாபெரும் வெற்றி பெருவோம். இதில் எந்த வித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றார். 

ஏழரை சனி ஒழிந்துவிட்டது என்று ஜெய் ஆனந்த் பேசியுள்ளாரே என்று நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த தினகரன், ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார். ஏற்கனவே, நான் இந்த பீடைகள் எல்லாம் ஒழிந்து விட்டது, ஏழரை சனி ஒழிந்துவிட்டது, இனிமேல் எங்களுக்கு நல்ல காலம் தான் என்று மன்னார்குடி கூட்டத்தில் கூறினேன் என்று நினைவுப்படுத்தினார். அவருடைய பேச்சு இந்த ஆட்சியாளர்களுக்கு பொருந்தும் என்றார். நாங்கள் தான் தமிழக அரசியலில் நிரந்தரம் என்று டிடிவி.தினகரன் பேட்டியளித்துள்ளார். 

இந்நிலையில் குறைந்த தொண்டர்களை வைத்து கொண்டு அதிக தொண்டர்கள் இருப்பது போல் தினகரன் நாடகம் நடத்துகிறார் என்று திவாகரன் குற்றம்சாடியுள்ளார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவே இதுபோன்று தினகரன் நாடகம் ஆடுகிறார். தமிழக அரசியலில் 2 பெரும் தலைவர்கள் மறைந்ததால் தொண்டர்கள் கதிகலங்கி நிற்கின்றனர். இதனை சாதகமாக்கி கொள்ள தினகரன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என திவாகரன் கூறியுள்ளார்.