ttv dinakaran take oath as legislative assembly member from rk nagar

ஆர்.கே.நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார் டிடிவி தினகரன். 

ஆர்.கே. நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், இன்று காலை சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். பின்னர், நேராக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் அறைக்குச் சென்றார். 

தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தாம் சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டதற்கான உறுதிமொழியை அவர் கூறினார். 

அறைக்கு வெளியிலும் உள்ளேயும் அவரது ஆதரவாளர்கள் பலர் காத்திருந்தனர். சபநாயகர் அறையில் உறுதி மொழி ஏற்று முறைப்படி வெள்ளிக்கிழமை இன்று சட்டப் பேரவை உறுப்பினராக டிடிவி தினகரன் பொறுப்பேற்றுக் கொண்டதை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

முன்னதாக, கடற்கரைச் சாலையில் வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். குறிப்பாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள், தினகரனால் நியமிக்கப் பட்ட மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் டிடிவி தினகரனுக்காகக் காத்திருந்தனர். 

திறந்த வாகனத்தில் வந்த தினகரன், பின்னர் ஆதரவாளர்களின் கூட்டத்துடன் சட்டப் பேரவை வளாகத்துக்கு வந்தார். 

1999 - 2004 வரை பெரியகுளம் மக்களவை உறுப்பினராக இருந்தவர் தினகரன். ஆனால் இப்போதுதான் முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார்.

முன்னதாக, கடற்கரைச் சாலையில் ஆலிண்டிய ரேடியோ முன்னிருந்து சட்டப்பேரவை வளாகம் செல்லும் வரையிலும் பெண்கள் பலர் காத்திருந்து ஆரத்தி எடுத்து வழி அனுப்பினர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சியினரால் ரூ.200 முதல் ரூ.500 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.