TTV Dinakaran Supporter Vetrivel says proof against 4 TN Ministers
தமிழக அமைச்சர்கள் 4 பேர் மீது பாலியல் புகார் உள்ளது என்றும் அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்க கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிர்மலா தேவி மீதான புகாரை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விளக்கமளித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, பெண் செய்தியாளரின் கன்னத்தை தட்டிக் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த செய்தியாளரிடம் அவர் மன்னிப் கேட்டுக் கொண்டார்.
அது மட்டுமல்லாது, ஆளுநர் பன்வாரிலால் தஞ்சையில் நடைபெற்ற கோயில் விழாவில் கலந்து கொண்டபோதும், மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, இதேபோன்று நடந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், 4 அமைச்சர்கள் மீதான பாலியல் ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்று பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மீதும் பாலியல் புகார் உள்ளது. அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளிவரும் என்றார். வெற்றிவேலின் இந்த பேட்டி தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
