TTV Dinakaran supporter Nanjil Sampath pressmeet
அரசு போக்குவரத்து கழகத்தை நஷ்டமாக்கி அதை தனியார் மயமாக்க தமிழக அரசு செய்து வருவதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆயிரம் பேருந்துகளை வாங்கி விட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து கட்டண உயர்வு நாட்டு மக்களைப் பெரும் சுமையில் ஆழ்த்தி இருக்கிறது. போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து மக்களும் மாணவர்களும் போராட வீதிக்கு வந்த பிறகு ஏதோ குறைப்பதுபோல அரசு பாசாங்கு செய்கிறது.
120 சதவிகிதம் கட்டணம் உயர்த்திவிட்டு நயா பைசா அளவில் குறைத்துள்ளார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், கழுதைமேல் ஏற்றிய சுமையைக் குறைக்க அதன் சுமையில் இருந்து சிறு துரும்பை எடுத்து கீழே போட்டு ஏமாற்றுவதுபோல இருக்கிறது.
நிர்வாகத் திறமையில்லாத அமைச்சர்களால் தமிழகம் ஏற்கனவே தரைமட்டமாகிவிட்டது. போக்குவரத்து துறை கண்ணுக்கு முன்பாகவே இன்று புதைந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துதுறை நஷ்டத்தில் இயங்க நிர்வாக சீர்கேடுதான் காரணம்.
போக்குவரத்து கழக அலுவலகத்தில் ஏகப்பட்ட அதிகாரிகள், தேவையற்ற செலவுகள், இதைக் குறைக்க முயற்சி எடுக்கிறார்களா? காரணம் போக்குவரத்து கழகத்தை நஷ்டமாக்கி அதை அப்படியே தனியாருக்கு விடுவதுதான் அவர்கள் திட்டம். எனக்கு கிடைத்த நம்பகமான தகவல்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அமைச்சர்கள் ஆயிரம் பேருந்துகளை வாங்கிவிட்டார்கள். அது தற்போது உள்ள அதே பெயர்களில்
ஓடும். ஆனால், ஓனர் இவர்கள்தான். இதை நான் இங்கு உறுதியிட்டு சொல்கிறேன்.
ஓ.பி.எஸ். மத்திய அரசின் ஆள். அவர் இப்போது வேஷம் போடுகிறார். ஊடகங்களையும், உலகத்தையும் நம்ப வைக்கப்பார்க்கிறார். அவர் மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள். ரஜினி கூறும் ஆன்மீக அரசியல், பாஜகவின் இன்னொரு முகம். ஜெயலலிதாவின் இறப்பை சர்ச்சைக்குள்ளாக்கவதே அநாகரீகம். தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன் யாரையோ திருப்திப்படுத்த அமைக்கப்பட்ட கமிஷன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு நாளாகிவிட்டது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
