ராணுவ கட்டுப்பாட்டோடு இந்திய மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும், தனது சாணக்கிய மற்றும் அதிரடி அரசியலால் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் செல்வி. ஜெ. ஜெயலலிதா.

ஆனால், அவர் மறைந்து சில மாதங்களிலேயே ஒரு கட்சியில் இத்தனை கோஷ்டிகள் பலமாக செயல்பட முடியுமா? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற ரேஞ்சில், அதிமுகவில் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாமல் மாறிவிட்டது.

ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலா தலைமையில், ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தபோது, பம்மியிருந்த பன்னீர்செல்வம், ஜெ. சமாதியில் அதிரடியாக அமர்ந்து பிரளயத்தைக் கிளப்பி, முதல் கோஷ்டியை உருவாக்கினார்.

பின்னர், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அமைதியாக சத்தமின்றி, ஆர்ப்பாட்டமின்றி தனக்கான மிகப்பெரிய கோஷ்டியை உருவாக்கிவிட்டார் முதலமைச்ச்ர எடப்பாடி பழனிசாமி. இது அதிமுகவின் கோஷ்டி நெம்பர் 2 ஆகிப் போனது.

கோஷ்டி நெம்பர் 3 ஆக 1, 2 எம்.எல்.ஏ.க்களில் ஆரம்பித்து 37 எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெருகி தற்போது 16 பேர் உறுதி என்ற நிலையில், பலம் வாய்ந்த கோஷ்டியாக உள்ளது டிடிவி தினகரனின் கோஷ்டி.

இது தவிர, திவாரகனின் ஆதரவு எம்எல்ஏக்கள் இருப்பது தனி ட்ராக்.  கட்சிக்குள் களேபரம் செய்யும் இந்த விஐபிகள் தவிர, கட்சிக்கு வெளியே இருந்து தனக்கான கோஷ்டியை உருவாக்கியவ்ரதான் ஜெ. அண்ணன் மகள் தீபா.

இத்தனை கோஷ்டிகள் பிரச்சனைகளுக்கிடையேதான், பிரிந்த கரங்கள், ஒன்று சேரப்போவதாக கடந்த ஒரு மாதகாலமாக செய்திகள் இறக்கைக்கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

இரு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா சமாதி அலங்கரிக்கப்பட்டதன் பின்னணியில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் கைகோர்த்து ஒன்று சேர்வதற்கான ஏற்பாடு என சொல்லப்பட்டது. ஓ.பி.எஸ்., தரப்புக்குள்ளேயே ஒத்தகருத்து ஏற்படாததால்தான் அன்றைய இணைப்பு தள்ளிப்போனது!

இந்த நிலையில், கடும் கோபத்தில் உள்ள தினகரன் அணியினர், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இணைந்து விட்டால் ஆட்சியும் வலுவாகிவிடும, கட்சியும் அவர்கள் பக்கம் சென்று விடும் என்று உறுதியாக நம்புகின்றனர். இரண்டையும் அவர்கள், வலுவாக்கிவிட்டால் இனி தங்களால் அரசியலில் எதுவும் செய்ய முடியாது என்றும் நம்புகின்றனர்.

தங்களது அரசியல் எதிர்காலமும், இதோடு முடிந்துவிடும் எனவும், உறுதியாக தெரிவிக்கின்றனர். இதனால், எடப்பாடி பன்னீர்செல்வம் கூட்டணி இணைந்து ஆட்சியை தக்க வைப்பதற்குப் பதிலாக தங்களது ஆதரவு 16 எம்.எல்,ஏக்கள் மற்றும் ஸ்லீப்பர் செல்களின் ஆதரவோடு ஆட்சியைக் கலைத்துவிடலாம் என டிடிவி தினகரன் தரப்பில் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளனவாம். 

இது தங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 2 கண் போயே ஆக வேண்டும் என்ற பழைய மொழியின் அடிப்படையில்தானாம்! வெல்லப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., கூட்டிணி பலமா? அல்லது தினகரனின் ஆதரவு பலமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.