முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு, எதிர்ப்புத் தெரிவித்து வரும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், புதுச்சேரி சொகுசு விடுதியை காலி செய்து விட்டு மைசூர் புறப்பட்டுச்  சென்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் ஆதரவி எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கடந்த 22 ஆம் தேதி  முதல் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களை தினகரன் சந்தித்து பேசி வந்தார். பின்னர் எம்எல்ஏக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் 1 எம்எல்ஏ தினகரன் அணியை விட்டு எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்று விட்டார். நேற்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரியில்  உள்ள சொகுசு விடுதியை காலி செய்துவிட்டு, நேற்று இரவு மைசூர் புறப்பட்டுச் சென்றனர்.

எடப்பாடி அரசு மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்து தமிழகம் திரும்புவது என அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.