முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் அவர்களை நான் ஆதரிப்பேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.  

இதனிடையே, டெல்லியில் குடியரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக அரசு சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களை நான் ஆதரிப்பேன் என தெரிவித்துள்ளார். முதலில் எடப்பாடி அரசு சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரட்டும் கொண்டு வந்தால் ஆதரவாக வாக்களிப்பேன். ஆனால், கொண்டுவருவார்களா என தெரியாது. இது வந்த பிறகு பார்போம் என கூறினார்.