TTV Dinakaran statement about vaiko in maleshiya

வைகோவை மதிக்காத மலேசிய அரசுக்கு கண்டனம்…சுறுசுறுப்பாக களத்தில் இறங்கிய டி.டி.வி.தினகரன்…

வைகோவை மலேசிய அரசு நடத்திய விதம் தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சுமார் 16 மணிநேரங்கள் விமான நிலையத்திலேயே வைத்திருந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், மலேசியாவுக்கே, வைகோ ஆபத்தானவர் என கூறி இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிட்டனர்.

மலேசிய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை மூலம் மலேசிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

வைகோவுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை குறித்து அதிமுக எம்.பி.க்கள் மூலம் நாடாளுன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதே போன்று தேமுதிக தலைவர் விஜய காந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலேசிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோவை மலேசிய அரசு திருப்பி அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோவை மலேசிய அரசு நடத்திய விதம் தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

முறையாக விசா பெற்று மலேசியா வந்தவரை தனி அறையில் 16 மணி நேரம் அடைத்து வைத்தது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

மலேசிய அரசிடம் விசாரித்து மத்திய அரசு இப்பிரச்சனை குறித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திஹார் சிறை, இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு, அன்னிய செலாவணி வழக்கு, புதிய அணி, எம்எல்ஏக்களுடன் சந்திப்பு என படு சுறுசுறுப்பு காட்டும் டி.டி.வி. தினகரன், கருணாநிதி, ஜெயலலிதா பாணியில் அறிக்கை வெளியிட்டு களத்தில் குதித்துள்ளார்