கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்து திணிப்புகள் என்றும், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக வரும் என்று டிடிவி தினகரன் அடித்து கூறியுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை டிடிவி தினகரன் மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மக்களவை தேர்தல் வரை பொறுத்திருங்கள் அதன் பின் இரண்டு மாதத்திற்குள் இந்த துரோக ஆட்சி தூக்கி எறியப்படும். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் தான் இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமாக இருந்ததாகவும் தினகரன் கூறினார். 

இந்த ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தினாலும் தமிழக மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை. குறிப்பாக இளைய சமுதாயம் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும் இல்லை. தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவில்லை என குற்றம்சாட்டினார். 

இன்றைக்கு நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் யாருக்கோ காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களை சந்திக்க பயமாக இருக்கிறது. இதன் காரணமாக தான் திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தலை கண்டு அஞ்சுகிறது. 

தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள். இறுதியில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் ஒன்றாக வரும்போது கூட்டத்தில் கோவிந்தாபோட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதனை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.