ஆறு, ஏரி மற்றும் குளங்களில் தூர் வார ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாயில் ஊழல் நடைபெற்றதாக கூறி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தினகரன்,  திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் காமராஜ் நேற்று என்னைப்பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் தேவையில்லாமல் பேசியிருக்கிறார். ஆனால் அவரைப்பற்றி நான் பேச வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தினகரன், தற்போது அமைச்சராக இருக்கும் காமராஜ் ஒரு காலத்தில்  எங்கள் வீட்டில் சாம்பார் வாளி தூக்கிக் கொண்ட திரிந்தார் என்றும். எங்கள் வீட்டில் தான் மூன்று நேரமும் சாப்பிட்டுவிட்டுப் போவார் என்றும் டி.டி.வி.தினகரன் ஏளனமாகப் பேசினார்.

தமிழகத்தில் தற்போது பருப்பு,முட்டை என ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக குற்றம் சாட்டினார். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் முடிவதற்குள் தற்போது நடக்கும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் அவர் கூறினார்.

ஆட்சி கவிழ்ந்து விட்டால் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் எங்கிருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும் என்றும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டார்.