ttv dinakaran speake about sellur raju speech

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வந்தது சசிகலாதான் என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருப்பது வெறும் சாம்பிள்தான் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் ஸ்லீப்பர் செல்கள் வெளியில் வருவார்கள் எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றாலும், அவருக்கு ஆதரவு அளித்து வரும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களில் தனது ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர்கள் வெளிப்படையாக தங்களுட்ன் இணைவார்கள் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்தது சசிகலா பரோலில் வந்துள்ளார்.

அவரை தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களில் சிலர் சந்திப்பார்கள் என்றும் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் அவர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்றும் டி.டி.வி.தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே நேற்று சசிகலா குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் சசிகலாதான் என்றும், அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அமைச்சர் செலலூர் ராஜுவின் பேச்சு மனசாட்சியுடன் அவர் இருப்பதையே காட்டுகிறது என தெரிவித்தார்.

இது ஒரு சாம்பிள்தான் என்றும், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் ஸ்லீப்பர் செல்கள் பொங்கி எழுந்து தங்களது அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.