* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரம், ராகுல்காந்தியை நல்ல தலைவர் என்று கூறியுள்ளார். அதற்காக ராகுலை பிரதமராக்கிட முடியுமா? மோடிதான் மீண்டும் ஆட்சி அமைப்பார். பி.ஜே.பி - அ.தி.மு.க. கூட்டணியை யாராலும் தோற்கடிக்க முடியாது: மதுரை ஆதீரனம் அருணகிரிநாதர். (மண்டை மேலே இருக்குற அந்த ருத்ராட்ச கொண்டைய மறந்துட்டு நீங்க அடிக்கடி வார்டு செயலாளர் ரேஞ்சுக்கு பேசிடுறீக சாமி. இதெல்லாம் அந்த ஈசனுக்கே பொறுக்குமான்னு யோசிங்க.)

* பொதுவாக அஜித் எந்த நிகழ்வுக்கும் கருத்து தெரிவிப்பதில்லை. அவர் அப்படி நம்மை பழக்கி வைத்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ரஜினியும் பொள்ளாச்சி விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வேதனையே: கஸ்தூரி. (ஆத்தாடியாத்தா கஸ்துரி...நீ பீச் ஓரமா ரெசார்ட்டுல குட்டை டாப் போட்டுக்கினு, தொடைகள் தெரிய லோ ஆங்கிள் கேமெரா முன்னாடி உட்கார்ந்து சமூக கருத்துக்கள் தெரிவிச்சு நாட்டை நல்வழி படுத்துறதே போதும். இதுல ரசினிகாந்து வாயை திறக்கலையேன்னு  வேற வருத்தமா?)

* கோவை சரளா எங்கள் கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுவில் அமர்ந்ததை கேள்வி கேட்க பத்திரிக்கையாளருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கும் உரிமை எனக்கு உண்டு. ஆனால் நான் கேட்க மாட்டேன்: கமல்ஹாசன். (ஆஹா, இத்தன நாளா ஆரம்பிக்கலையேன்னு நினைச்சோம், தல ஃபார்முக்கு வந்துடுச்சு. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு டைரக்டா சொல்லாம...பத்திலிருந்து ஒன்பதை கழிச்சால் வரும் எண்ணோடு, நாலில் இருந்து மூன்றை கழித்தால் வரும் விடையை கூட்டினால் வருவதே இரண்டுன்னு பேசினாதான்யா நீ கமல்ஹாசன்!)

* அரசியல் களம் மட்டுமில்லாது அனைத்து தரப்பிலும் தி.மு.க.வை விமர்சிப்பவர்களை மடக்கும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறார் சபரீசன். இதனால் ஸ்டாலினை எதிர்க்க தி.மு.க.வில் யாருமில்லை. இப்பேர்ப்பட்ட சபரீசன் எனும் பூனைக்கு மணியை கட்டியிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்: அ.தி.மு.க. (சபரீசனுக்கும்  மணி கட்டுறது இருக்கட்டும், முதல்ல உங்க கட்சியில எல்லாரும் கொஞ்சம் வாயை கட்டுங்க பாஸ்.  ஏற்கனவே கை சிக்குன விஷயத்துல இப்ப தெனாவெட்டா பேசி, தலையையும் கொண்டு சிக்கவுடுறதே உங்க பொழப்பா போச்சு.)

* அம்மாவுக்கு அடுத்து டி.டி.வி.தினகரனுக்குதான்  பெண்களின் ஆதரவு அமோகமா இருக்குது. இரு ஆளுமைகள் இல்லாத பெரிய தேர்தல் களமிது. இந்த வேளையில் தினகரனைதான் ஆதரிப்பார்கள் மக்கள்: சி.ஆர்.சரஸ்வதி. (சரசக்கா...பெண்கள் ஆதரவு அதிகமிருந்தா எதுக்குக்கா அரசியல்ல டைம் வேஸ்ட் பண்ணுறாரு! பேசாம சீரியல்ல ஹீரோவாக்கிடுங்க உங்க தலைவரை. ராதிகாவுக்கு போட்டியா, பீரியட் சீரியல் தயாரிச்சு அண்ணனை ராசா வேடம் போட வெச்சு அமைச்சர் ஜெயக்குமாரை தெறிக்கவிடலாம். ஏற்கனவே அவரோட பெயர்ல  ‘டி.வி’ இருக்குறது என்னா செண்டிமெண்டு பொருத்தமுன்னு பாரேன் சரசக்கா. )