தேனி

ஜெயலலிதாவும், டி.டி.வி. தினகரனும் 12 வழக்குகளில் இணைக்கப்பட்டிருந்தபோது கருணாநிதியிடம் டி.டி.வி. தினகரன் இரகசியப் பேரம் பேசி இந்த வழக்குகளில் இருந்து தன்னை தனியாகப் பிரித்து தப்பித்துவிட்டார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். 

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் 7070 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. 

இதில்,  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியது:  "தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1972-ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கி, பத்து ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். 

அவர், சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட தன்னிறைவுத் திட்டங்களை கொண்டு வந்தார். அதனையடுத்து, ஜெயலலிதா முதல்வரான பின்னர் 14 இலட்சம் தொண்டராக இருந்த அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர் இயக்கமாக மாற்றினார்.

ஜெயலலிதா மீது 96 வழக்குகள் இருந்தன. இதில், 12 வழக்குகளில் டி.டி.வி. தினகரனும் இணைக்கப்பட்டிருந்தார். இதற்காக, கருணாநிதியிடம் டி.டி.வி. தினகரன் இரகசியப் பேரம் பேசி இந்த வழக்குகளை தனியாகப் பிரித்து தப்பித்துவிட்டார். 

இதனை வழக்குரைஞர் ஜோதி மூலம் அறிந்த ஜெயலலிதா, கட்சியிலிருந்தே தினகரனை வெளியேற்றினார். இதிலிருந்து யார் துரோகி என்பது தெரியவரும். 

மோசமான சசிகலா குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே  தர்மயுத்தம் நடத்தினேன்" என்று அவர் தெரிவித்தார்.