அதிமுகவின் இரு அணிகளும் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைய வேண்டும், சுய விருப்பத்திற்காக இணைந்தால் அது நீண்ட நாட்கள்  நீடிக்காது என அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, டி.டி.வி.தினகரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை, போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாய் மாற்றுவது, இரு அணிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த இருவரின் சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சசிகலாவை சந்தித்து விட்டு சிறைக்கு வெளியே பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து  நீதி விசாரணை  வேண்டும் என்று மேலூர் பொதுக் கூட்டத்திலேயே  தான் பேசியதாக தெரிவித்தார்.

அந்த விசாரணை நடைபெற்றால்தான் சசிகலா பத்தரை மாற்று தங்கம் என்பதை நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

 அதிமுகவின் இரு அணிகளும் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைய வேண்டும் என்றும்  சுய விருப்பத்திற்காக இணைந்தால் அது நீண்ட நாட்கள்  நீடிக்காது எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

இரு அணிகளும் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் , வியாபார நோக்கத்துட்னும் செயல்படுவதாக தினகரன் குற்றம்சாட்டினார்.

தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக  அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இணைந்தால் , அந்த  அமைச்சரவையின் ஆயுட்காலம் டிக்காது என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் , ஸ்லிப்பர் செல் களைப் போல செயல்படுகிறர்கள் என்றும், தேவையானபோது நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றும் டி.டி.வி.தினகரன்  கூறினார்.