18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஆளும் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் என எல்லோரும் செம்ம ஹேப்பி!  ஆட்சி, அதிகாரங்கள் தப்பித்துவிட்ட நிலையில் தினகரன் அணியினரை போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வின் வி.வி.ஐ.பி.கள். அதிலும் ஓ.பன்னீர்ல்செல்வமோ சில படிகள் மேலே போயி தினாவையும், சசியையும் வறுத்தெடுத்திருக்கிறார். 

“தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த போது தினகரன் என்னை தொடந்து அழைத்ததால்தான் அவரை நண்பர் ஒருவரின் வீட்டில் சந்தித்தேன். அதுவும் நானும், பழனிசாமியும் இணைந்துவிட்டால் தான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்! என்று அறிவித்ததால் தான் நீண்ட நாள் யோசனைக்கு பின் அவரை சந்தித்தேன். ஆனால் சந்திப்பின் போதே தினகரன் இன்னும் திருந்தவில்லை என்பதை புரிந்து கொண்டேன். 

பொதுவான அரசியல் நன்மை கருதிதான் நான் இந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தேன். ஆனால் இதை இப்போது வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்த முயன்றுள்ளார் தினகரன். ஆனால் அவர்தான் அசிங்கப்பட்டு நிற்கிறார். தன் செயல்களின் மூலமாக தான் ஒரு மட்டமான அரசியல்வாதி என்பதை தினகரன் நிரூபித்துவிட்டார். 

அவரைப் போல் கீழேயிறங்கி அரசியல் செய்ய என்னால் முடியாது. நான் இப்போதும் சசிகலாவை வெறுக்கிறேன். அந்த வெறுப்பின் அடிப்படையில்தான் தர்மயுத்தம் தொடர்கிறது. தினகரனுக்கும், எனக்குமான பழைய சந்திப்பின் பின்னணி உண்மையை பிரதமர் அறிந்து வைத்துள்ளார். தேவைப்பட்டால் நான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இதை விளக்குவேன்.” என்று பொளந்து கட்டியுள்ளார். இது தினாவை அநியாயத்துக்கு சூடேற்றி இருக்கிறதாம்.