கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளின் பகல்கொள்ளையைத் தடுக்க வேண்டிய அரசு பேரிடர்கால சட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயிக்க தயங்குவதன் மர்மம் என்ன என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக சில தொலைக்காட்சி ஸ்டிரிங் ஆபரேஷன்களில்  தெரியவந்துள்ளது. அந்த மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், “கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 66 சதவீதம் பேர் சென்னைவாசிகள். மரணமடைபவர்களில் நான்கில் ஒருவர் சென்னைவாசி. நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை என்பதையே இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக செய்திகள் வருகின்றன. சுமார் ஏழாயிரம் பேர் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், இனியும் வரப்போகிற நோயாளிகளுக்கு அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது?


ஜூன், ஜூலை மாதங்களில் நோயின் தாக்கம் உச்சத்தை தொடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், சென்னையிலுள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநகராட்சி, படுக்கை வசதியை ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லையே ஏன்? பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் முதல் ஒருலட்சம் வரை கட்டணம் வசூலித்து ஒரு பகல்கொள்ளையே நடத்துகின்றன. அதைத்தடுக்க வேண்டிய அரசு பேரிடர்கால சட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயிக்க தயங்குவதன் மர்மம் என்ன?ப்படி எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் எவற்றுக்கும் பதில் சொல்லும் மனநிலை தமிழக அரசுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானாது. இந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, நோய்த்தொற்று அதிகரித்துவருவதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இனிமேலாவது அரசு செய்ய வேண்டும்” என அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.