கருப்பு பணத்தை வெள்ளைகளாக மாற்றுவதற்காகவே டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே அமைச்சர்களுக்கும் டிடிவி.தினகரனுக்கும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது. அதிலும் முக்கியமாக மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே டிடிவி தினகரன் முதல்வர் பதிவிக்காக சதி செய்தார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார். 

இதற்கு பதிலடி கொடுத்த தினகரன், முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் பேசி வருகிறார்.  ஓபிஎஸ் மன நலம் பாதிக்கப்பட்டவர், அண்ட புழுகு புழுகுகிறார் என அதிரடியாக பதிலடி தந்தார். இந்நிலையில் திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார் தினகரன் போன்ற காளான்கள் அரசியல் களத்தில் முளைக்கும் என்று தெரிவித்தார். மேலும் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். தினகரன் ஒரு பகல் கனவில் இருக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார். 

ஒரு பழமொழி சொல்வார்கள். சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோத்திற்கு உதவாது. கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்கணும். முதலில் வாய்க்கால் தாண்ட பார்க்கணும். வாய்க்கால் தாண்டவே வக்கு இல்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம் என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார்.