இரட்டை இலைய மட்டுமில்லை, குக்கர் சின்னத்தையும் நம்பி நாங்க இல்லை என்று சுயேச்சையா நின்னே அத்தனை தொகுதியிலும் ஜெயிப்போம் என்று டிடிவி.தினகரன் அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரி என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில் புதுச்சேரியில் அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று அளித்த பேட்டியில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்தார். 

நாங்கள் அதிமுகவின் ஒரு அங்கம் என்று டெல்லி உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது. மக்கள் ஓபிஎஸ், இபிஎஸ்  ஆகியோரை ஏற்றுக்கொள்ளவில்லை.  இரட்டை இலை சின்னத்தில் நின்றாலும் அவர்கள் படுதோல்வி அடைவது உறுதி என்றார். சட்டவிதிப்படி புதிய கட்சி துவங்கினால், எங்கள் உரிமையை இழந்து விடுவோம். இரட்டை இலையை பெறுவதில் போராட முடியாது. எனவேதான் அப்போது  புதிய கட்சி ஆரம்பிக்கவில்லை. சின்னம் என்பது முக்கியமல்ல, யார் அதில் போட்டியிடுகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இது எங்களுக்கு பின்னடைவு இல்லை.

 

குக்கர் சின்னத்தை நம்பியும் நாங்கள் இல்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக நின்றே வெற்றி பெறுவோம். மேலும் குக்கர் சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக வெற்றி பெரும் என தினகரன் கூறியுள்ளார்.