ttv dinakaran press meet
தனிக்கட்சி தொடங்க வாய்ப்பே இல்லை…அதே அதிமுக கொடியைத்தான் பயன்படுத்துவோம்… தில்லாக பேட்டி அளித்த தினகரன் !!!
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தற்போதைய அதிமுக கொடியையே பயன்படுத்தி ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்போம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்த சில நாட்களுக்குள், இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் அந்த அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது, அந்த தீர்ப்பளித்த அடுத்த நாளே ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 21 ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
கட்சி, சின்னம் இரண்டையும் இழந்து நிற்கும் டி.டி.வி.தினகரன் திருச்சியில் நேற்று மாவட்ட செயலாளர்கள் மாநாட்டை நடத்தினார். இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாள்களிடம் பேசினார்.
அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் அதிமுகவின் கொடி மற்றும் அலுவலகம் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும், அதனால் அதிமுக கொடியையே பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்த டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று கட்சியையும், சின்னத்தையும் மீட்பேன் என குறிப்பிட்டார்.
வருமான வரித்துறை சோதனை என்பது ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை நடக்கும் என்றும் ஆர்.கே நகரில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே போட்டி என்றும் தெரிவித்தார்.
