TTV Dinakaran press meet in thanjur about divakaran

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்தை சமூக வலை தளங்களில் பதிவு செய்தால் அவர்கள் சொந்தக்காகரர்களாக இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் தூக்கி எறிந்துவிடுவேன் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார்.

தினகரனுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் அம்மா அணி என்ற பெயரிலேயே செயல்பட்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார். இது சசிகலா குடும்பத்தினரிடையே இருந்த பனிப்போரை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றுப் பேசினார்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் வழக்கில் நிச்சயம் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் உளவுத்துறையை பயன்படுத்தி பல்வேறு தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். எனவே கட்சிக்கு எதிரான கருத்தை யாராவது பதிவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன் என தெரிவித்தார்..

யாருக்கும், எதற்காகவும் பயந்து பின்வாங்க மாட்டேன். என்னை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. உறவுகளையும், நட்பையும் மதிப்பவன் நான். விட்டில் பூச்சிகளைப்போல் துரோகிகளிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். இணையதள பதிவு உண்மையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க போவதில்லை. அதே சமயம் காவிரி நீரை பெற்றுத்தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. ஜெயலலிதாவின் ஆட்சியை தொண்டர்கள் ஆதரவோடு விரைவில் அமைப்போம் என்றும் டி.டி.வி.தினகரன் .தெரிவித்தார்.