ttv dinakaran press meet about minister s.p.velumani
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வயிற்றுப் பிழைப்புக்காக தன்னைக் குறித்து தவறாக பேசி வருவதாகவும், இப்போது வரை அவர் தனக்கு நல்ல நண்பர் தான் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு கிடைத்த பிறகு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு கிடைத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி அதிமுகவில் இருந்து ஜானகி ஒதுங்கிக் கொண்டது போல, தினகரனும் இரட்டை இலை சின்னத்தைப் பெற எண்ணாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், அமைச்சர் வேலுமணியின் இந்த பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லி தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
வேலுமணி தனது வயிற்றுப்பிழைப்புக்காக இது போன்று பேசுவதாகவும், தற்போது வரை அவர் தனது நல்ல நண்பர் என்றும் தினகரன் கூறினார்..
