சசிகலாவின் கணவர் ம.நடராசன் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த டிடிவி தினகரன் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு, மருத்துவமனைக்கு சென்று ம.நடராசனை சந்தித்தார்.

புதுக்கோட்டையில் நாளை நடைபெறும் திருமண விழா ஒன்றில் தினகரன் கலந்து கொள்ள இருந்தார். அதேபோல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளைச் சந்தித்து தினகரன் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.நடராசனை சென்று சந்தித்தார்.

புதுக்கோட்டைக்கு, தினகரன் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நகரம் முழுவதும் வரவேற்பு சுவரொட்டிகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. பல போஸ்டர்களில் நாளைய முதல்வரே வருக என்ற வாசகங்கள் இருந்தன. ஆனால், ஒரு சுவரொட்டியில் மட்டும் முதல்வரே வருக வருக என்று
அச்சிடப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போதைய முதலமைச்சர் யார்? தினகரனா? எடப்பாடி பழனிச்சாமியா? என்று கேள்வி எழுப்பினர். தினகரன் ஆதரவாளர்களின் ஆர்வத்துக்கு எல்லையே கிடையாதா? என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.