TTV Dinakaran Playing Drama Join Hand with OPS Team

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு என்பது, தினகரன் திட்டமிட்டு நடத்தும் நாடகம் என்றும், அதனால், அணைகள் இணைப்புக்கு சாத்தியம் இல்லை என்றே பன்னீர் தரப்பினர் கூறிவருகின்றனர்.

இரட்டை இல்லை சின்னத்தை மீட்பதற்காகவும், பன்னீருக்கு பெருகி வரம் மக்கள் செல்வாக்கை கட்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், அவர் அணிகள் இணைப்பு என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

அணிகள் இணைப்பு என்று சொல்லி விட்டு, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி ஊடகங்களில் குற்றம் சாட்டி வருவதும், பன்னீர்செல்வம், நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதும், அரசியல் நோக்கர்களை ரொம்பவே யோசிக்க வைத்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவை எதிர்த்து தனி அணியாக பிரிந்தார் பன்னீர்செல்வம். அவருக்கு தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. ஆனாலும், எம்.எல்.ஏ க்களை தம்வசப்படுத்தி ஆட்சியை கைப்பற்றியது சசிகலா தரப்பு.

ஆனால், பன்னீர் அணியினர் அளித்த புகாரின் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இல்லை சின்னம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சசிகலா பெங்களூரு சிறையில் இருப்பதால், எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. தினகரனும் பல்வேறு வழக்குகளால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். தற்போது அவரிடம், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொது செயலாளர் சிறையில் இருக்கிறார். துணை பொது செயலாளர் போலீசின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாத எடப்பாடி முதல்வராக இருக்கிறார்.

இதனால், தினகரன் தரப்பில் இருந்து திட்டமிட்டு நடத்தப்படுவதே, அணிகள் இணைப்பு நாடகம் என்று பன்னீர் தரப்பை சேர்ந்த பலரும் கூற ஆரம்பித்து விட்டனர்.

பன்னீர் அணி, மீண்டும் அதிமுகவில் இணைந்து விட்டால், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் சிக்கல் இருக்காது என்று கணக்கு போட்டு காய்களை நகர்த்துகிறார் தினகரன். 

அத்துடன், கட்சியில் இணைந்த கையோடு. பன்னீரின் மக்கள் செல்வாக்கை நீர்த்து போக செய்யும் அனைத்து ஏற்பாடுகளும் தினகரானால் தயார் செய்யப்பட்டு விட்டன. 

அடுத்து பன்னீரின் ஆதரவாளர்கள் அனைவருக்கும், கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கி தமது ஆதரவாளர்களாக மாற்றி விடுவது ஆகியவை அவரது திட்டங்கள்.

அந்த மூன்று திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே, அணிகள் இணைப்பு என்ற நாடகத்தை, தினகரன் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார் என்று பன்னீர் தரப்பினர் தீர்க்கமாக கூறுகின்றனர்.

இதன் காரணமாகவே, சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் ராஜினாமா கடிதங்களை பெறவேண்டும், அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரையும், அதிகார பூர்வமாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளில் பன்னீர்செல்வம் உறுதியாக இருந்து வருகிறார்.

பன்னீர் விதிக்கும் இந்த மூன்று நிபந்தனைகளை, எக்காரணம் கொண்டும் எடப்பாடி அணியினரால், ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், அணிகள் இணைப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தங்களுக்கு இருக்கும், தொண்டர்கள் மற்றும் மக்கள் செல்வாக்கை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்க பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். 

இதனால், பன்னீர் அணியை எப்படி தாஜா செய்து, தங்களுடன் இணைப்பது என்று மண்டையை போட்டு பிய்த்துக்கொண்டு இருக்கிறது எடப்பாடி தரப்பு.