ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயர கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை அதன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயர கொடிக்கம்பத்தில் 20 அடி நீளம் 30 அடி உயரமுள்ள கொடியினை அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார். 

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கும் என பேசினார். அமைச்சராக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என ராஜேந்திர பாலாஜி நினைப்பது தவறு. இந்த ஆட்சி முடிந்த பின் அ.ம.மு.க.வின் வளர்ச்சியை திண்ணையில் உட்கார்ந்து அவர்கள் வேடிக்கைதான் பார்க்க வேண்டும். இருட்டில் தனியாகப் போக பயந்தவர்கள்தான் கூட்டணி வைத்துள்ளனர்.  

ஆர்.கே.நகர் தேர்தல் போல தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோல்வியடையும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெலுங்கு பட ரவுடி போலவும், கோயில் பூசாரி போலவும் உள்ளார் எனத் தெரிவித்தார். மேலும், விருதுநகர் மற்றும் தென்காசி  மக்களவை தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வேண்டும் எனவும் பேசினார்.