இரண்டு தொகுதியில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயங்கிய எடப்பாடி அரசு, இப்போது 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து ’போருக்கு தயார்! வர்லாம் வா பாக்கலாம்!’ என்கிறது எதிர்க்கட்சிகளை. 

ஆனால் இதை எதிர்க்கட்சிகள் நம்ப தயாரில்லை. பொறுப்பாளர்களை அறிவித்து, இடைத்தேர்தலுக்கு தயாராவது போல் சீன் போட்டுவிட்டு பிறகு தலைமை செயலர் மூலமாக மூவ் செய்து தேர்தல் ஆணையத்தில் மழை, குளிர், வெயில், காய்ச்சல்ன்னு ஏதாவது ஒரு சாக்கு சொல்லி தேர்தலை தள்ளிக்கொண்டே போவார்கள்! என்கிறார்கள். 

தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்றவைதான் இப்படி ’டவுட்’டில் இருக்கின்றன. ஆனால் அ.ம.மு.க.வோ வேறு ரூட்டில் இருக்கிறது. அக்கட்சி துவக்கப்பட்ட பின் இதுவரையில் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை எனவே இடைத்தேர்தல் நடந்தால் எலெக்‌ஷன், இல்லாவிட்டால் அனுபவங்களின் கலெக்‌ஷனாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டது. 

18 பேர் தகுதி நீக்க தீர்ப்பு விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று அறிவித்த கையோடு, தன் அணியின் அந்த மாஜி எம்.எல்.ஏ.க்களைக் கூப்பிட்டு ’அவங்கவங்க எங்கே ஜெயிச்சீங்களோ அங்கே அப்படியே நிற்கப்போறீங்க. அதனால இன்னைக்கே போயி வேலைகளை ஆரம்பியுங்க. எதுக்கும் தயங்க வேணாம் ‘எல்லாத்துக்கும்’ நானிருக்கேன்.’ என்று உசுப்பேற்றி இருக்கிறார். 

விளைவு! பழனியப்பன், செந்தில்பாலாஜி என முக்கிய தலைகள் சரசரவென களமிறங்கிவிட்டனர். அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் களமிறங்கப்போகும் செந்தில்பாலாஜி ’நான் தி.மு.க. வேட்பாளர்ட்ட தோத்தாலும் பரவாயில்ல ஆனா இவனுங்க வேட்பாளரை (அ.தி.மு.க. வேட்பாளர்) டெபாசீட் வாங்க கூட விடமாட்டேன்.’ என்று தொடை தட்டியபடி இறங்கியிருக்கிறார். 

அதேபோல் தினகரனும் முறுக்கிக் கொண்டு ஃபீல்டுக்கு வந்துவிட்டாராம். என்னவானாலும் பரவாயில்ல, எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல அ.தி.மு.க. கோஷ்டிக்கு தோல்வி பயத்த மொதல்ல இருந்தே காட்டியாகணும்!” எனும் ஒற்றை வரி அஜெண்டாவுடன் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாராம் தினா. தலை கீழ் நின்றாவது தினகரன் டீமை ஒடுக்கி ஓரங்கட்டணும்! என்று அ.தி.மு.க. சபதம் போடுகிறது. இவர்கள் இருவருக்கும் நடுவிலோ ‘ஜெயிக்கிறோம் ஆட்சியை பிடிக்கிறோம்’ எனும் இலக்குடன் ஸ்டாலின் தெறிக்க விடுகிறார். ஆக தமிழக அரசியல் களத்தில் அல்லு தெறிக்க துவங்கிவிட்டது. மொத்தத்துல நமக்கு நல்ல ட்ரீட் இருக்குதுன்னு சொல்லுங்க!