டி.டி.வி.தினகரனின் பொதுக் கூட்டம் தொடங்கியது… 14 எம்எல்ஏக்கள், 2 எம்.பி.க்கள் பங்கேற்பு…

மதுரையை, அடுத்த மேலூரில் நடைபெற்று வரும் டி.டி.வி.தினகரனின்  எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கூட்டத்தில், 14 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் இரண்டு எம்.பி.,க்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, தற்போது மூன்றாக உடைந்துள்ளது. சசிகலா அணியில் இருந்து பிரிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி அணியை உருவாக்கியுள்ளார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணிக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனிடையே  தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதன் முதல் கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், தஞ்சாவூர் ரங்கசாமி, விளாத்திகுளம் உமா மகேஸ்வரி, சாத்தூர் சுப்ரமணியன், மானாமதுரை கென்னடி மாரியப்பன், கரூர் தங்கதுரை, கம்பம் ஜக்கையன், பெரியகுளம் கதிர்காமு, பெரம்பூர் வெற்றிவேல், பரமக்குடி முத்தையா உட்பட, 14 எம்.எல்.ஏ.,க்களும்; சிவகங்கை செந்தில்நாதன், கோவை ஏ.பி.நாகராஜன் ஆகிய 2 எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து டி.டி.வி.தினகரனுக்கு செங்கோல் வழங்கப்பட்டது..மேலும் தினகரன் ஏராளமானோர்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.