மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே கட்சியில் இருந்து நேற்றே விலகிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் அளித்ததாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்யும் வரை அதிமுகவிற்குள் அதிகார சக்தியாகவே வலம் வந்தவர் டிடிவி தினகரன்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு எதிரான பிடியை டெல்லி போலீசார் இறுக்கத் தொடங்கியதும் தினகரன் மீது அமைச்சர்கள் வைத்திருந்த பயபக்தி கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது.

மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுவே பிரதானமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அவருக்கு மக்கள் செல்வாக்கும் இல்லை. போதாத குறைக்கு வழக்குகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இனியும் அவர் சொல் பேச்சு கேட்டு நடப்பது சரியல்ல என்று மூத்த அமைச்சர்கள் பலரும் மனம் திறந்து பேசினார்களாம்..

இதனைத் தொடர்ந்து டிடிவியை சந்தித்த அமைச்சர்கள் சிலர்  தங்கமணி வீட்டில் விவாதித்ததை அப்படியே ஒளிமறைவு இல்லாமல் கூற அதிர்ந்தே போனாராம் டிடிவி..

எல்லாம் கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த தினகரன் சித்தியை கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கெடுவாங்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள் உடனிருந்தவர்கள். இருப்பினும் குறிப்பிட்ட கெடுவிற்குள் பதில் அளிக்காததால் தினகரனை ஒதுக்குவது என அமைச்சர்கள் முடிவு செய்துவிட்டார்கள்... 

நேற்றுவரை தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அமைச்சர்கள் தற்போது தனக்கு எதிராக குரல் கொடுத்ததைக் கண்டு கலங்கிப் போன தினகரன், இனியும் கட்சிக்குள் இருப்பது சரியல்ல என்று கருதி, அதிமுகவில் இருந்து நேற்றே விலகிவிட்டதாக அறிவித்தாராம்.

அமைச்சர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கையே தினகரனின் திடீர் பல்டிக்கு காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.  அதிமுகவில் இருந்து விலகாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று  பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கப்பட்டதாம்...

இதனால் மிகுந்த தடுமாற்றத்தில் இருந்த டிடிவி வேறு வழியின்றி இந்த முடிவை அறிவித்தார் என்கின்றனர் உடனிருந்தவர்கள்.