டிடிவி தினகரன் 420 என்று கூறியது அவருக்குத்தான் பொருந்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லியில் நடைபெற்ற துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அவர், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் 420 என்று கூறியது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த அவர், 420 என்று குறிப்பிடுவது அவருக்குத்தான் பொருந்தும் என்றார்.

அதிமுக அணிகள் தொடர்பான இணைப்பு குறித்த கேள்விக்கு, அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெறவில்லை. அதிமுக அணிகள் இணையும் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிப்பது குறித்து ஜெயலலிதா இருக்கும்போதே மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்றோம்.

இப்போது, தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிக ஓட்டுகளில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.