ttv dinakaran in marudupandiar function at kalaiyar koil

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த முக்குலத்தோர் வாக்குகளை தக்கவைக்க முயல, தினகரனோ காளையார் கோவிலில் களமாடி முக்குலத்தோர் வாக்கு வங்கியின் உட்பிரிவை வாரி சுருட்ட முயன்றிருக்கிறார்.

தென் மாவட்டத்து அ.தி.மு.க.வினரை அசரடித்திருக்கும் விஷயம் இப்போது இதுதான். 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் வருடந்தோறும் குருபூஜை நடப்பது வழக்கம். இந்தாண்டு பூஜையில் தினகரன் திகுதிகுவென கலந்து கொண்டிருக்கிறார். சிவகங்கை மாவட்ட முகப்பிலேயே அவருக்கு மெகா வரவேற்பு தந்தது அவரது டீம். சுமார் இருநூறு பைக்குகள் பைலட் படை போல் செல்ல, தினகரனின் வாகனம் மாஸாக நகர்ந்திருக்கிறது.

மருதுபாண்டியர்களின் படத்துக்கு மரியாதை செலுத்தியபடி தினா வணங்கி நிற்க, ‘அம்மாவின் வாரிசே! ஒரிஜினல் முதல்வரே!’ என்று சிலர் சவுண்டு கொடுக்க ஏரியாவே கலகலப்பானது.

அதன் பிறகு மருதுபாண்டியர் நினைவிடத்திலும் வந்து அஞ்சலி செலுத்தினார் தினா. அப்போது ‘துரோகிகளின் சிம்ம சொப்பனமே! சின்னம்மாவின் தளபதியே!’ என்று சிலர் ஆக்ரோஷமாய் முழக்கமிட அவர்களை பார்த்து கையசைத்தவர், ‘நாம நிச்சயம் அவங்களுக்கு சிம்ம சொப்பனம்தான்!’ என்று சொல்லி அழுத்தமாக தலையசைத்தார்.

இந்த நிகழ்வில் கூடிய கூட்டம் தினாவை உசுப்பேற்றி இருக்கிறது என்றே உறுதியான தகவல்.

தினாவின் காளையார் கோவில் வருகையும், வரவேற்பும் அப்படியே லைவ்வாக எதிரணி முக்கியஸ்தர்களின் கண்களுக்கு கேமெராக்கள் வழியே பாய்ந்து கொண்டிருந்தன. மாஸ் வரவேற்பையும், பொங்கிய கூட்டத்தையும் பார்த்து மிரண்டுவிட்டதாம் அந்த அணி. 

’அகமுடையார் வாக்கு வங்கி தமிழ்நாடு முழுக்க 2 சதவீதமாம். இதை அப்டியே அல்வா மாதிரி கவர் பண்ணிட்டாரேய்யா டி.டி.வி.’ என்று அங்கலாய்த்திருக்கிறார் அமைச்சர் ஒருவர். 

மருதிருவர் நிகழ்வில் கலந்து கொண்டு மாஸ் காட்டியதன் மூலம் இருவரணியை ஏகத்துக்கும் நோகவிட்டிருக்கிறார் தினா என்பது மட்டும் உறுதி!