சமீபத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை தினகரன் தலைமையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது, ‘இணைப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. நம்மை அழிக்க நினைக்கிற பி.ஜே.பி.க்கு காவடி தூக்கிட்டு இருக்கிற அவங்க கூட நாம கலக்க முடியாது.’ என்றவர், ‘தேர்தலை சந்தியுங்க தைரியமா!’ என்றார் தகுதி நீக்கமான எம்.எல்.ஏ.க்களை பார்த்து. அவங்களும் பவ்யமாக ‘சரிங்க சின்னம்மா!’ என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தனர். 

இந்நிலையில், தங்க தமிழ்செல்வனுக்கு ஒரு பெரிய டவுட்டு இருக்கிறது. அதாவது இடைத்தேர்தல் நடந்து, போட்டியிட்டால் தாங்கள்தான் ஜெயிப்போம்! இதை ஆளுங்கட்சி நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளது. எனவே தங்களை தேர்தலில் நிற்கவே முடியாமல் செய்ய முயலும், வேட்புமனுவையே தள்ளுபடி செய்யும் என்று உறுதியாக நினைக்கிறார். அதனால், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக, சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு வழக்கு ஒன்றை தொடுத்து, ‘தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டா? எந்தெந்த காரணங்களினால் அவர்களின் வேட்பு மனு தள்ளுபடியாகும் சூழல் உள்ளது?’ என்பது உள்ளிட்ட சில சந்தேகங்களுக்கு விடை காண நினைக்கிறார்.

 

துவக்கத்திலேயே அலர்ட்டாகி, சட்ட விளக்கங்களுடன் களமிறங்கினால், எடப்பாடி தரப்பு தங்களை தள்ளுபடி செய்வதிலிருந்து தப்பிக்கலாம் என்பது தங்கத்தின் ஐடியா. இந்த யோசனைக்கு தினகரனின் முழு ஆசீர்வாதமும், உதவியும் இருக்கிறது. இந்நிலையில் தங்கத்தமிழ் செல்வனின் இந்த சந்தேகங்கள் குறித்து மீடியா ஒன்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் விளக்கம் கேட்டபோது...”குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது! என்ற சட்டப்பிரிவை முன்வைத்து இந்த பதினெட்டு பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வாதம் வைக்கப்படுகிறது. இது தவறான வாதம். 

இவர்கள் குற்ற வழக்கின் கீழ் தண்டிக்கப்பட்டு பதவியை இழக்கவில்லை. கட்சி நடவடிக்கைக்கு உள்ளானதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாத யாரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையுமில்லை. இதற்கு முன் தேர்தல் ஆணையத்திற்கு இப்படியான வழக்கு வந்ததில்லை. 

இடைத்தேர்தல் அறிவித்து, இந்த 18 பேரும் போட்டியிட களமிறங்குகையில் யாராவது தடை கேட்டு கோர்ட்டை நாடினால், அப்போது நீதிமன்றம் வழங்கும் உத்தரவுப்படை தேர்தல் ஆணையம் செயல்படும். ஆனாலும் தற்போதைய நிலையில் இந்த நபர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட எந்த தடையுமில்லை.” என்று வெகு விவரமாக கூறியுள்ளார்.  

இவர் மட்டுமின்று சீனியர் வழக்கறிஞர்களும், தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி அனுபவம் பெற்ற வழக்கறிஞர்களும் இதே ரீதியில்தான் கருத்தைக் கூறியுள்ளனர். அதிலும் ஹைலைட்டாக ‘இன்றைய நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எம்.எல்.ஏ. பதவியை இழந்த 18 பேரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையத்தால் கூட தடுக்க முடியாது.” என்று சொல்லியிருக்கிறார் சீனியர் அட்வோகேட்டான விஜயன். இந்த தகவல் அப்படியே தினகரனின்  காதுகளுக்குப் போக, மனிதர் ஏக உற்சாகத்தில் இருக்கிறார். ’இடைத்தேர்தல் வரட்டும், நிக்குறோம்! ஜெயிக்குறோம்! ஆட்சியை கவுக்குறோம்!’என்று குஷியாகி இருக்கிறார். ஹும்! இடைத்தேர்தல் நடந்தால்தானே?!