டிடிவி தினகரனை முதலமைச்சராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, புலம்பத் தொடங்கி உள்ளார் என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு அதிமுகவின் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இணைப்பு நடைபெற்றது. இந்த இணைப்பில், கழக தொண்டர்கள் உற்சாகமடைந்ததாக கூறப்பட்டாலும், டிடிவி தினகரன் தரப்பினர் அதிருப்திக்கு ஆளாகினர். விரைவில் பொதுக்குழு
கூட்டப்படும் என்றும், அப்போது சசிகலாவை நீக்க முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், மேலும் கலக்கமடைந்த டிடிவி தினகரன் அணியினர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதவை வாபஸ் பெறுவதாக கூறினர். மேலும், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது சசிகலா தான் என்றும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., துரோகமிழைத்து விட்டதாகவும் டிடிவி அணியினர் கூறி வந்தனர்.

முதலமைச்சர் என்பவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்லவேண்டும். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று சொல்வது கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காகத்தான் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு ரூ.50 ஆயிரம் வாங்குபவர் நாஞ்சில் சம்பத் எனவும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், பற்றி அசிங்கமாக பேசுவதை நாஞ்சில் சம்பத் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏ., ஆறுகுட்டி புலம்பத் தொடங்கியுள்ளார் என்று கூறியுள்ளார். 

கர்நாடகாவில், தமிழர்களுக்கு ஆதரவாக போராடியதால், நான் கன்னடர்களால் தாக்கப்பட்டேன். எனக்காக ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்தார்.

கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, காசு வாங்காமல் இருக்கிறாரா? என்றும் டிடிவி தினகரனை முதலமைச்சராக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.