நடிகர் கமல் பற்றி கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் கண்ணியத்துடன் பேசினால், பிரச்சனைகள் வராது என டிடிவி.தினகரன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன் கூறியதாவது:-

நடிகர் கமல் சிறந்த நடிகர், பண்பாளர். அவர் அரசை பற்றி கருத்து கூறியிருக்கிறார். அது அவரது கருத்து சுதந்திரம், கருத்து உரிமை. இதை யாரும் தடுக்க முடியாது. அவரது கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேசப்பட்டதா, சுய விருப்பு மற்றும் வெறுப்பு ஏற்பட்டு அவர் பேசுகிறாரா என்பதை ஆய்வு செய்ய கூடாது.

முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக கேட்க வேண்டும். அனைத்து துறையிலும் ஊழல் பெருகிவிட்டது என அவர் கூறியுள்ளார். அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்பதை முதலில் கேட்கவேண்டும். அதை விடுத்து அமைச்சர்கள் ஒருமையில் பேசியள்ளனர். அமைச்சர்கள் கண்ணியமாக பேசி இருக்க வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இந்த கட்சியில் நடந்து செல்லும் அமைச்சர்கள், இதுபோன்று ஒருமையில் பேசி இருக்க கூடாது. அப்படி அவர்கள் சரியான முறையில் பேசி இருந்தால், இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.