TTV dinakaran condemned

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள், அரசின் அலட்சியப்போக்கால், பறிபோகும் கொடுமை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வறையின் மேற்கூரை இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கட்டடத்தில் தூங்கிக் கொண்டிருந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் ஓட்டுநர்கள். ஒருவர் நடத்துனர். 

படுகாயம் அடைந்த 3 பேர் காரைக்கால் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் பொறையார் போக்குவரத்து கழக பணிமனையின் ஊழியர்கள் ஓய்வறை முற்றிலும் இடிக்கப்படுகிறது. இதற்காக 2 பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இடிந்த இந்த கட்டடம் சரியாக பராமரிக்கப்படாமலும், சீரமைப்பின்றியும் இருந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டடத்தை பராமரிக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாததே காரணம் என்றும் கூறி வருகின்றனர். 

கட்டடம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியானதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள், அரசின் அலட்சியப்போக்கால், பறிபோகும் கொடுமை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக அதில் கூறியுள்ளார்.

அதில் மக்கள் நலனை மறந்து முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பதாகவும் குற்றம் சாடியுள்ளார். தொழிலாளர்கள் இறந்த பின் வழங்கும் நிதியில் கட்டடத்தை முன்பே சீர் செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்றும் அதில் கூறியுள்ளார். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் டிடிவி தினகரன் அதில் தெரிவித்தார்.

மக்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அல்லும் பகலும் அயராது உழைத்தவர் நம் ஜெயலலிதா என்றும், ஆனால் இன்றோ மக்கள் வாழ்வதே கேள்விகுறியாகிக் கொண்டிருப்பதாகவும், மக்கள் வாழ்வைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் டிடிவி தினகரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.