அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்க ஓட்டு போட்டீர்கள். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என தெரிவித்தார்.

 2016-ல் யாரை நீங்கள் வெற்றிபெறச்செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் வெற்றிபெற்ற பின் உங்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்காததால் சோகமாக திரிந்தார்.

அவருக்கு தன்னை தவிர யார் மீதும் நம்பிக்கை இல்லை. இங்குள்ள நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரைக்கும், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தாக்குபிடிக்க முடியாமல் தி.மு.க.வில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரது சுபாவத்திற்கு ஏற்ற கட்சி தி.மு.க.தான் என செந்தில் பாலாஜியை கிண்டல் செய்தார்.

.தற்போது அதிமுக  ஆட்சி முடிவுக்கு வந்த உடன் இருக்கும் அமைச்சர்களில், கைகளில் கயிறு கட்டி இருக்கும் பாதிபேர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தொழிலை பார்க்க போய்விடுவார்கள் என்று தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.