திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது, தொடக்கத்தில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.

பின்னர் சசிகலா அணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு பிரிவும் இயங்கத் தொடங்கியது.

இந்த இரு அணி பிரமுகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வழகின்றனர். இந்நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், அவரது நியமனங்களும் செல்லாது என்றும் அறிவித்தார்.

இதையடுத்து இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கிழித்தெறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர்  பழனிசாமி ஆதரவாளர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்ட நிலையில், தற்போது தினகரனின் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.