சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீடு அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் போட்டோவை மட்டும் மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு காரணமாக பெரும் அதிருப்திக்கு ஆளான டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், கடந்த சில தனங்களுக்கு முன்பு, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

பின்னர், டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும், புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி முற்றுவதால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுத்தலாம் என்றும் அதனால் அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ரிசார்ட் முன்பு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இரு நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது டிடிவி தினகரனின் உருவப்படத்தை அவர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் சிலர், ஓ.பி.எஸ். உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் சென்னை, அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீடு அருகே அவருடைய ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். டிடிவி தினகரனின் வீட்டுக்கு இரு புறமும் அவை வைக்கப்பட்டிருந்தன.

இன்று அதிகாலையில் அந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. பேனரில் இருந்த டிடிவி தினகரனின் புகைப்படத்தை மட்டும் மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.